இன்றைய புளியம்பட்டி புனித அந்தோனியார் திருத்தலத்திற்கு சிறப்பு மிதுந்த வரலாறு உண்டு. அந்த 250 ஆண்டு காலச் சரித்திரத்துக்கு சில நிகழ்வுகள் சான்று பகர்கின்றன.
கி.பி. 17 ஆம் நூற்றாண்டின் மத்திய காலத்தில் சிவகாசிக்கு அருகில் உள்ள கிளவிப்பட்டி என்ற கிராமத்திலிருந்து இராமன், இலட்சுமணன் என்ற இரு சகோதரர்கள் பிழைப்புத் தேடி தங்கள் மாட்டு மந்தையோடு நாரைக் கிணறு வந்தார்கள். அங்கு ஊர்த்தலைவர் கொடுத்த தொல்லைகள் காரணமாக மணியாச்சி ஜமீன்தார் உதவியோடு புளியம்பட்டியில் குடியமர்ந்தனர். இந்தக் குடும்பங்கள் பழுகி பெருகிய காலக் கட்டத்தில் பொத்தக்காலன்விளை (தூத்துக்குடி மறைமாவட்டம்) என்ற கிறித்தவர் மரிய அந்தோனி தொம்மை என்பவர் தமது உடன் பிறந்தோரின் தவறான போக்கினால் மனம் நொந்து சொந்த ஊரில் வாழ விருப்பமின்றி புளியம்பட்டிக்கு வந்திருந்தார். இங்கே ஏற்கனவே வாழ்ந்து வந்த சிவகாசிக் கிளவிப்ட்டிக் குடும்பத்தில் திருமணம் முடித்துக் கொண்டு ஜமீன்தாரின் பண்ணைகளில் தொழில் செய்து வந்தார். ஓரளவு வருவாயும், வசதியும் பெருகியது. எந்த நிலையிலும் உண்மையான கிறித்தவராக வாழ வேண்டும் என்று உறுதி கொண்டிருந்தார். கத்தோலிக்கத் திருச்சபையின் மீது கொண்டிருந்த பற்றினால் செபிப்பதற்கும் திருப்பலியில் பங்கு பெறுவதற்கும் சீவலப்பேரிக்கு அருகில் உள்ள சந்தைப்பேட்டைக்கு அவர் செல்வது வழக்கம்.
தாமிரப்பரணி ஆற்றின் செழுமையில் அழகுமிகு கோட்டைப் போன்ற சந்தைப் பேட்டை சவேரியார் கோவிலை இன்றும் புதுப்பித்த நிலையில் மக்கள் என்றும் நாடிவரும் நிலையில் பாhக்கலாம். புன்னைக்காயல் நோக்கிய பயணத்தில் தூய சவேரியாரின் காலடி பட்ட இடம் இது என்று மரபு சொல்கிறது. தாமிரபரணி ஆற்றின் சீற்றத்தினாலும், வெள்ளப் பெருக்கினாலும் இங்கிருந்த மீனவக் குடும்பங்கள் ஆற்றிற்கு அப்பால் இருக்கும் கலியாவூர், தூத்துக்குடி, காளான்கரை, இலங்கை போன்ற இடங்களுக்கு இடம்பெயர்ந்து சென்றிருக்கின்றனர். நீண்ட காலமாக இந்த புகழ்பெற்ற சந்தைப்பேட்டை தூய சவேரியார் கோவில் சிதைந்த நிலையில் இருந்தது. இப்போது புதுப் பொழிவுடன் தோறறம் அளிக்கிறது. இங்கிருந்த தூய அந்தோனியார் திரு உருவம் தான் இப்போது புளியம்பட்டி திருத்தலத்தில் இருக்கிறது. இது தான் புளியம்பட்டி புதுமை சிருபம்!
தொம்மை அந்தோனிக்கு 12 ஆண் மக்கள். இவர்களில் 11 ஆண் மக்கள் இறந்து விட்டனர். பெண் பிள்ளையோ திருமணம் முடிந்த 15 நாட்களிலேயே விதவையாகி, பிறந்த வீடு திரும்பினாள். எஞ்சியிருந்த ஒரே மகனையும், வளர்த்து ஆளாக்கிய நிலையில் வைசூரி என்ற கொடிய நோய் தாக்கியது. இப்போது இருக்கும் மருத்துவ வளர்ச்சி இல்லாத அந்த காலத்தில் மக்கள் யாரை நோக்கி தஞ்சம் செல்வார்கள்? சக்தியிழந்து தடுமாறி நின்றார் தொம்மை. அந்தோனியார் தான் மனதில் தோன்றினார். தொம்மை எப்படி செபிக்க வேண்டும் என்று கூட தெரியாமல் மனம் வெதும்பி இருந்தார். “அந்தோனியாரே என் மகனைக் காப்பாற்றும், என்ன வேண்டுமானாலும் செய்கிறேன்” என்று கூட செபித்திருக்கலாம். இந்த வார்த்தைகள் தானே அன்புள்ளம் எட்டும் கடைசி நிலை. ஒரு தாய் தன் பிள்ளை படும் வேதனை தாங்காது அவள் சொல்லத் துணியும் கடைசி எண்ணம் “என்னை எடுத்துக்கொள், என் பிள்ளையை தந்துவிடு.” அப்படித் தான் தொம்மை அந்தோனி செபித்திருப்பார்.
ஒரு நாள் “குழந்தை பிழைக்கவும் குடும்பம் தழைக்கவும் ஓர் கோவில் எழுப்பு” என்று அந்தோனியார் சொல்வதாக உள்ளத்தில் ஒரு வெளிப்பாடு. கண்ணிமைக்கும் நேரத்தில் தோன்றிய இந்த உணர்விற்கு அடுத்து அந்தோனியாரே தோன்றி சொன்னதாக ஒரு பிரமிப்பு. அவருடைய விதவைமகளுக்கும் அதே காட்சி.
உடனே செயல்பட துவங்கினார் தொம்மை. மகனின் நோயைக் கூட பொருட்படுத்தவில்லை. கோவில் கட்டுவது எப்படி என்ற வேலையில் இறங்கினார். கோவிலை எங்கு கட்டுவது? மணியாச்சி ஜமீன்தாரை அவர் அணுகினார். ஜமீன்தாருக்கும் அப்படியொரு தரிசனம் கிடைத்தது என்றுக் கேள்விப்பட்டு உள்ளம் சிலிர்த்தார். கோவில் கட்டும் முயற்சியில் ஒரு சங்குச் செடியின் இலையில் சிலுவை அடையாளம் தென்படவே அந்த இடத்தைத் தோண்டிய போது அங்கு ஒரு தங்கச் சிலுவையையும் கண்டார். அந்த இ;டத்தில் ஒரு ஓலைக் குடிசையை அமைத்தார். சந்தைப் பேட்டையிலிருந்த அந்தோனியார் திரு உருவத்தை அந்த ஓலைக் குடிசையில் வைத்தார். உருக்கமாய் செபித்து வந்தார். தனது மகன் நோய் நீங்கி நலம்பெற்றதைக் கண்ட தொம்மை மனம் குளிர்ந்தார். தனது குடும்பத்தையே அந்தோனியாரின் பக்தர்களாக ஆக்கினார்.
இந்த ஓலைக்குடிசைக் கோவிலில் இறைவன் தூய அந்தோனியார் வழியாக அற்புதங்கள் பல செய்தார். எண்ணற்ற புதுமைகள் புரிந்தார். குறிப்பாக நோய்களிலிருந்து விடுதலை, குழப்பத்திலிருந்து விடுதலை, மன நோய்களிலிருந்து விடுதலை, கட்டுகளிலிருந்து விடுதலை, தீய சக்திகளிடமிருந்து விடுதலை, குணமாக்க முடியாத நோய்களிலிருந்து விடுதலை... இன்னும் பல. மக்கள் கூட்டம் குவியத் தொடங்கியது. வந்து சேர சாலைகiளே இல்லாத நிலையில் கூட மக்கள் கூட்டம் அலை மோதியது.
அருள்பணியாளர்களின் கவனம் புளியம்பட்டிக்குத் திரும்பியது. புளியம்பட்டிக்கு முதலில் பன்னீர குளமும் அதன்பின் அலவந்தான்குளமும் இருந்ததால் அங்கிருந்த அருள்பணியாளர்கள் செவ்வாய் கிழமை தோறும் புளியம்பட்டிக்கு வந்து தங்கி திருப்பலி மற்றும் வழிபாடுகள் நடத்தி வந்தார்கள். 15.02.1954 இல் புளியம்பட்டி தனிபங்காக மலர அருள்பணியாளர்கள் இங்கேயே நிலையாகத் தங்கி மக்களை வழிநடத்தி வருகின்றனர். 13.06.1961 இல் இன்றிருக் கும் வானுயர்ந்த கோபுரம கொண்ட இப்போதைய எழில் மிகு கோவில் திருநிலைப் பெற்று திருத்தலக் கோவிலாகியது.
கரத்தில் கடவுள் குழந்தை! காலடியில் பக்தர் கூட்டம்!! இதுதான் புளியம்பட்டியின் உண்மை. பரந்த திறந்த மனம் படைத்த எவரும் தூய அந்தோனியார் வழியாக இத்திருத்தலத்தில் இறைவன் செய்து வரும் அற்புதங்களை காணாமல் இருக்க முடியாது. பெற்ற நன்மைகளுக்கு நன்றியாக மக்கள் வைத்துள்ள தங்க வெள்ளிப் பொருட்கள், உலோகத்தாலான உடல் உறுப்புகள், கப்பல், படகுகள், வீடுகள், குத்துவிளக்குகள் இப்படி பல, கோடி அற்புதருக்கு சான்றுகளாக இருக்கின்றன. தூய அந்தோனியார் வழியாக இறைமகன் இயேசுவிடம் என்பதே நமது இறை நம்பிக்கையின் அடித்தளம்.
நம்புஙகள் செபியுங்கள் நல்லது நடக்கும் என்பதே இத்திருத்தலத்தில் வீசும் நம்பிக்கை அலைகள்!