“முதிர் வயதில் என்னைத் தள்ளிவிடாதேயும்” என் ஆற்றல் குன்றும் நாளில் என்னைக் கைவிடாதேயும்” என்ற திருப்பாடல் (71:9) எழுப்பும் அபயக்குரல் இன்று ஒரு சமுதாயப் பிரச்சனையாக வளர்ந்து வருகிறது.
சொல்ல முடியாத வேதனைக் கதைகளை நெஞ்சில் சுமந்தபடி விரக்தியின் உச்சத்தில் உழன்றபடி வாழ்க்கையை ஓட்டுகிற முதியவர்களின் எண்ணிக்கை பெருகி விட்டது. சொந்த வீடு அவர்களது துயரங்களைத் துடைப்பதில்லை: பெருக்குகிறது. பிள்ளை மனம் கல்;லு. இது பழமொழி மட்டுமல்ல, இன்றைய எதார்த்தம். துன்புறுத்தப் படுவோமா என்ற பயத்தாலும், பாதுகாப்பின்மை உணர்வாலும் தனிமைச் சிறையில் துயரம் தோய்ந்த நினைவுகள் புரண்டெழுந்து எத்தனை முதியவர்களின் நெஞ்சங்களை ரணமாக்குகின்றன.
இந்தப் பின்னணியில் முதியோர் மாண்பு பற்றிய சிந்தனையோடு பாளையங்கோட்டை மறைமாவட்ட வெள்ளிவிழா தொடக்க நிகழ்ச்சி 09.09.1997ல் புளியம்பட்டியில் நடைபெற்றது. அதன் நினைவாக முதியோர் இல்லத்துக்கான அடிக்கல் நாட்டினார் ஆயர் மேதகு இருதயராஜ்.
முதியோர் ஆண்டான 1999 ஜீன் 13ம் நாள் ஞாயிறு மாலை 5 மணிக்கு பாளை ஆயர் மேதகு இருதயராஜ் ஆண்டகை முதியோர் நலனுக்காக இல்லத்தை அர்ச்சித்து அர்ப்பணித்தார். தூத்துக்குடி மாவட்ட ஆட்சியாளர் உயர்திரு. மு. மாலிக் பெரோஸ்கான் இல்லத்தைத் திறந்து வைத்தார். இல்லத்தை கண்காணிக்கும் பொறுப்பேற்ற புனித சார்லஸ் பொரோமேயோ சபை மாநிலத் தலைவி சகோதரி இக்னே~pயஸ் குத்துவிளக்கேற்றி இல்லத்தை இயக்கி வைத்தார். அந்த நாளிலிருந்து இந்தப் பதுவா முதியோர் இல்லத்தின் பொறுப்பேற்று நடத்தும் பணியில் சகோதரிகள் தங்களையே அர்ப்பணித்திருக்கிறார்கள். அந்தோனியார் சிறுவர் காப்பக (கருணை இல்லம்) மாணவியரும் இச்சகோதரிகளின் கண்காணிப்பில் இருக்கின்றனர். தற்போது அருட்சகோதரி. விக்டோரியா தலைமை சகோதரியாகவும், அருட்சகோதரிகள் சகாய மேரி, அமுதா அவர்கள் அவருக்கு உதவியாகவும், பொறுப்பாகவும் பதுவா முதியோர் இல்லத்தை வழிநடத்துகின்றனர்.
தற்சமயம் ஆதரவற்ற முதிய பெண்கள் 20 நபர்கள் இல்லத்தில் வாழ்கின்றனர். முதுமை என்பது சகித்துக் கொள்ள வேண்டிய இயற்கையின் நியதியல்ல. மகிழ்வோடு ஏற்றுக் கொள்ள வேண்டிய இறைவனின் மகத்தான கொடை என்ற உணர்வை அவர்களுக்கு ஊட்டுகிறோம். முதியோர் இல்லத்தின் கட்டிடம், கண்காணிப்பு அனைத்துச் செலவுகளும் திருத்தலத்தின் காணிக்ககையை வைத்தே செய்யப்படுகின்றன.