சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்..... வைகாசி மாதத்தின் ஒரு வைகறைப் பொழுது, புளியம்பட்டி வாழ் திரு. காசி நாடார் என்பவர் நாழிக்கிணறு போல் சிறுத்திருந்த புதுமைக் கிணற்றில் கமலை இறைத்துக் கொண்டிருந்தார். கமலைத் தண்ணீரில் ஊத்துமலையிலிருந்து வந்திருந்த சில திருப்பயணிகள் குளித்துக் கொண்டிருந்தனர். திடீரென..... மாடு .... கலைந்து...... முன்னும் பின்னும் இழுத்து.... ஓரு மாடு கிணற்றுக்குள் விழுந்து விட்டது. கூடவே.... குளித்துக்கொண்டிருந்த ஒரு தாயும் மகளும் மாட்டோடு கிணற்றுக்குள் விழுந்து விட்டனர். பக்கத்திலிருந்தவர்கள் ஓடி வந்தனர். புனிதரின் அருங்குறி அங்கே... நிழலிட... கிணற்றுக்குள் விழுந்த மாடும் மற்றும் தாய், மகள் ஆகிய இருவரும் எவ்வித சிறு காயமுமின்றி மீட்கப்படுகின்றனர்.
சில காலம் கழித்து அதே காசி கமலை இறைத்துக் கொண்டிருந்தார். தூத்துக்குடியிலிருந்து வந்திருந்த ஒரு யாத்திரிகர் தண்ணீர் வாளியைக் கிணற்றுக்குள் போட்டுவிட்டார். உடன் வந்த கனத்த சரீரமுடைய ஒருவர் தனது ஊமை மனைவியிடம் உடைகளைக் களைந்து கொடுத்துவிட்டு, காசி உதவியுடன் கமலைக் கயிறு வழியாகக் கிணற்றுக்குள் இறங்கினார். திடீரென்று கமலை இறைக்கும் பட்டறைப் பலகையுடன் கமலைக் கல்லும் உடைய கயிறு வழியாக கிணற்றுக்குள் இறங்கிய மனிதரும் மேலே இருந்து உதவிய காசி கிணற்றுக்குள் விழுந்து விட்டனர். ஆனால், என்ன ஆச்சரியம்! இருவருக்கும் சிறிது காயம்கூட ஏற்படவில்லை. அதை விட ஆச்சரியம்.......!! தனது கணவர் கிணற்றுக்குள் விழுவதைக் கண்டு கூச்சலிட முற்பட அந்தப் ஊமைப் பெண் ....... காப்பாற்றுங்கள்! காப்பாற்றுங்கள் என்று பேசவே ஆரம்பித்துவிட்டாள்.
அன்றையிலிருந்து இன்றுவரை புதுமைகள் நடந்துகொண்டே இருக்கின்றன. தீராத நோயுள்ளவர்கள்..... புதுமை கிணற்றில் 13 வாளி தண்ணீர் இறைத்து குளித்த பின்பு ஆலயத்தை சுற்றி வந்தால் நோய் நீங்கும்.... தீய ஆவிகள் விலகி போகும் என்ற ஆழமான நம்பிக்கையின் அடிப்படையில் மக்கள் ஏராளமான புதுமைகள் பெற்று வருகின்றனர். நம்பி வந்தோரை தூய அந்தோனியாரும் ஏமாற்றுவதில்லை. நம்பினோருக்கு எல்லாம் கைகூடும்.